வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும் அத்திருமணத்தை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்சின் ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்நடைமுறை அமுலுக்கு வரும் என சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த ‘ பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ முறைமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கணவன் – மனைவி விசாவில் தங்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளமை காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சிடம் இது தொடர்பில் விசாரித்தபோது தெரிவித்ததாக, பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடிகளில் போதைப்பொருள் கடத்தல் மோசடிகள், நிதித் தூய்தாக்கம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமான மோசடிகள் அடங்குவதோடு, பெரும்பாலும் ஏழைப் பெண்களே இத்தகைய திருமணங்களுக்கு இலக்காகிறார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட இலங்கைக்குள் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டவர்கள் இலங்கையிலுள்ளவர்களை திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி பெற வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிகாட்டினார்.
எனவே, இலங்கையர் ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், பதிவாளர் நாயக திணைக்களத்திடம், பாதுகாப்பு சான்றிதழை ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுடன், அவர் அதை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கி எவ்வித குற்றமும் அற்றவர் என உறுதிப்படுத்தப்படுவார்.
அத்துடன் குறித்த நபர் தொடர்பான உடல் நலச் சான்றிதழும் ஒப்படைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]