மறக்கமுடியுமா இன்றைய நாளை?
தமிழ் மக்களின் தலைவிதி பெரிதாய் மாறி இன்றுடன் 49 ஆண்டுகள்.
—————————————————-
இலங்கை அரசு முதன்முதலாக, இந்த நாட்டை பௌத்த நாடாக அரசியலமைப்பினூடாகவே பிரகடனம் செய்த நாள் இன்றாகும்!
தமிழர்கள் தாக்கப்பட்டதும் உடமைகள் அழிக்கப்பட்டதும் எரிக்கப்பட்டதும், உயிரோடு தார் ஊற்றிக் கொளுத்தப்பட்டதும் 58 ஆம் ஆண்டின் இன்றாகும்.
ஆயினும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியலமைப்பினூடகவே தமிழ் மக்களின் வரலாற்றின் தலைவிதி பெரிதான மாற்றத்துக்குள்ளானது 1972 ஆம் ஆண்டின் இன்றாகும்!
சோல்பரி அரசியலமைப்பில் நாட்டின் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பாயிருந்த 29 ஆம் சரத்தையும் புதிய அரசியலமைப்பின் மூலம் இல்லாமற் செய்த நாள் இன்றாகும்!
சிறுபான்மை மக்களுக்கு ஒரு பாதுகாப்பாகவிருந்த “ சென்ற் சபை” யையும் புதிய அரசியலமைப்பின் மூலம் அழித்த நாள் இன்றாகும்!
தமிழ் மக்கள் காலம் காலமாகி நம்பி தம் மண்ணிலும் வளர்த்துக் காத்த இடதுசாரித் தலைமையே அவர்களைக் கழுத்தறுத்த நாள் இன்றாகும்!
ஐம்பத்தாறில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது “ ஒரு நாடு இரு மொழி; இருநாடு ஒரு மொழி” என்று அரசை எச்சரித்த இடதுசாரித் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா இதன் சூத்திரதாரியாகினார்.
இந்த அரசியலமைப்பு “ஒரு புதிய கட்டிடத்திற்கு- ஒரு புதிய அடித்தளத்தை அமைப்பதாவதுடன், இது இந்த நாட்டின் மக்கள் அதனை முற்றாக ஆட்கொள்ளும்…”. என இந்த அரசியலமைப்பைப் பற்றி வர்ணித்தார். (M J A Cooray (1982) Judicial Role under the Constitution of Ceylon/Sri Lanka)
இடதுசாரியான அவர் குறிப்பிட்ட “இந்த நாட்டின் மக்கள்” என்பது தங்களை அல்ல என தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டது இன்றைய நாளிலாகும்.
அங்கிளிக்கன் கிறிஸ்தவத்திலிருந்து அரசியல் அதிகாரத்திற்காக பௌத்தத்திற்கு மாறிய பண்டாரநாயக்க குடும்பம் தமது அரசியல் இருப்பைத் தக்கவைக்க பிறப்பால் கிறிஸ்தவரான கொல்வினை வைத்தே
அரசியலமைப்பின் மூலம் நாட்டை
பௌத்த நாடாகவே பெயரிட்டது இன்று ஆகும்.
ஈழநாடு: 1972 மே 22 இல் வந்த செய்தி வருமாறு:-
“இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் தமிழர்கள்.
அத்தகைய தமிழினத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது .
இந்த ஆபத்திலிருந்து எப்படி நாம் தப்புவது? என
ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்திக்கத்தொடங்கியுள்ளனர்.“
மே 21 அன்று வண்ணை நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் பற்றிய செய்தி அது.
பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உரையாற்றிய தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா
இப்படி மிகுந்த கவலையுடன் உரையாற்றினார்.
பண்டிதர் க பொ இரத்தினம் வாசிக்க “தமிழ்மக்களாகிய நாங்கள் எங்கள் உரிமைகள் கிடைக்கும் வரை- அரசியல் திட்டத்துக்கு ஆதரவு வழங்கமாட்டோம்” என அனைவரும் உரத்த குரலில் சொன்னார்கள்.
தமிழரசுக் கட்சிப் பிரமுகர்களுடன்,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பிரமுகர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
நாவலர் மண்டபம் நிரம்பியிருந்ததுடன், அதன் வளவிலும் வீதியிலும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர்.
-வரதராஜன் மரியம்பிள்ளை