பயங்கரவாதி நாவல் குறித்து சென்னையில் வாசகசாலை ஏற்பாடு செய்த உரையாடல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கவிஞர் தீபச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,
“கொரோனா ஊரடங்கு, பொருளாதார நெருக்கடி என பயங்கரவாதி நாவல் வெளிவந்த காலத்தில் இருந்தே அதில் கவனம் செலுத்த முடியாத சூழல். ஆனாலும் புத்தகத்தின் விற்பனையும் வாசகரின் வரவேற்பும் இயல்பாக நன்றாகவே இடம்பெறுவதாக பதிப்பாளர் கூறினார். இந்த நிலையில் பயங்கரவாதி நாவல் வெளியீட்டை விரைவில் கிளிநொச்சியில் நடத்தவும் எண்ணியுள்ளோம். அதன் முன்னீடாக இன்று வாசகசாலை அமைப்பின் ஏற்பாட்டில் பயங்கரவாதி குறித்த கலந்துரையாடல் சென்னையில் இடம்பெறுகிறது. வாய்ப்புள்ள நண்பர்களை கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறேன்.” என்றார்.
வாசகசாலை அமைப்பின் அழைப்பு
வாசகசாலை வழங்கும் சிறப்புத் தொடர் நிகழ்வான “ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையில்” வரும் ஞாயிற்றுக்கிழமை (17/07/22) நடைபெறவுள்ள 13-ஆம் நிகழ்விற்கான அழைப்பிதழை உங்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இம்முறை நமது உரையாடலுக்கு எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.ஈழ எழுத்தாளரால், ஈழ மண்ணிலிருந்து, ஈழம் பற்றி எழுதப்பட்ட நாவல் என்ற அடிப்படையில் ‘பயங்கரவாதி’ நாவலுக்கான முக்கியத்துவம் இயல்பாகவே அதிகரிக்கிறது.
ஈழத்ததமிழர்தம் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, அவர்களுடைய வாழ்வோடு ஒன்றாக கலந்துவிட்ட புகழ்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தை கதையின் மையப்புள்ளியாக கொண்டு சுற்றிச் சுழல்கிறது இந்த நாவல்.
ஈழத்தைச் சிதைத்தழித்த இனப்படுகொலை யுத்தமானது, யாழ் பல்கலைக்கழகத்தையும் விட்டு வைக்கவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைப் போர் எப்படியெல்லாம் குறுக்கு வெட்டாக பாதித்தது என்பதை அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நாவல் சொல்லிச் செல்கிறது.
இந்த நிகழ்வில் வாய்ப்பும் நேரமும் அமையப் பெற்ற நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சீரியதொரு உரையாடலை முன்னெடுக்குமாறு வாசகசாலை அன்புடன் கேட்டுக் கொள்கிறது. நன்றி. மகிழ்ச்சி..!