ரஜினிக்காக தாய்லாந்து இளவரசியின் பிரம்மாண்ட வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்
சூப்பர் ஸ்டாருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ராஜா வம்சத்தை சேர்ந்த ரசிகர் பட்டாளமும் உண்டு என்பதை சமீபத்திய நிகழ்வு உறுதி செய்தது.
கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா, தாய்லாந்துக்கு ரஜினி வந்த போது அவரை பற்றி தெரிந்துள்ளார் தாய்லாந்து இளவரசி. சினிமா நடிப்பைத் தாண்டி ரஜினியின் ஆன்மீக ஈடுபாடு குறித்த செய்தி அவரை கவர ரஜினியை சந்திக்க விரும்பினாராம். இதை அறிந்த கலைப்புலி தாணு வெளிநாட்டில் இருக்கும் ரஜினியிடம் தெரிவித்து சென்னை வருவதற்கு முன் தாய்லாந்தில் சென்று ராணியை சந்தித்துள்ளார்.
தாய்லாந்து விமான நிலையத்தில் இறங்கியவுடன் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க தாய்லாந்து இளவரசி தன் குடும்பத்துடன் வந்து இருப்பதைக் கண்டு ரஜினிக்கு ஆனந்த அதிர்ச்சி. தனது காரிலேயே ரஜினியை தன்அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார். ரஜினியுடன் ‘கபாலி’ தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணுவும் செல்கிறார்.
மாம் லுயாங் ராஜதரஶ்ரீ ஜெயன்குரா என்கிற இளவரசிதான் ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்றவர். அரண்மனையில் உணவு வேளைக்குப் பின் ஆன்மீகம் குறித்து ரஜினியும் இளவரசியும் நீண்டநேரம் விவாதம் செய்தனர். பின்னர் அங்குள்ள அரண்மனையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான தியான மண்டபத்தைப் பார்த்து ரஜினி பிரமித்து போனாராம் .
பிறகு ரஜினி ‘இமயமலையில் பாபாஜி’ புத்தகத்தை ‘ஆட்டோகிராஃப்’ போட்டு பரிசாக தந்துள்ளார். அடுத்து ‘தாய்’ மொழியில் டப் செய்யப்படும் ‘கபாலி’ ஆகஸ்ட் மாதத்தில் தாய்லாந்தில் இருக்கும் 300 ஸ்கிரீன்களில் ரிலீஸாகிறது.