அடுப்படியில் உள்ள பேணி டப்பாக்களை கழுவி
சாணியால் நிலம் மெழுகி
செம் மண்ணால் சுவரை பூசி
அதன் மேல் வெள்ளை பொட்டு வைத்து
ஓலைக் குடிசை சாமிகளை தூசு தட்டி
ஒடைஞ்சு போன மேசைக் காலிற்கு சிறு கல் வைத்து
வருடக் கலண்டரில் வெட்டி ஒட்டிய மூன்று தேவியரையும்
ஊர்த் திருவிழாவில் வாங்கிய பிள்ளையாரையும் வைத்து
வேப்பிலை தோரணம் கட்டி
சிரட்டையில் தணல் அள்ளி இடையிடையே சாம்பிராணி தூவ
அடுத்த வீட்டு பிள்ளைகளும் சாம்பிராணி மணம் கண்டு
வீடு வர
பூணூல் கட்டாத அப்பா குருக்களாக
பள்ளி செல்லாத அம்மா தேவாரம் பாட
தங்கைகளுடன் சேர்ந்து
மாணிக்க வீணையில் தொடங்கி
சகலகலா வல்லி பாட
இடையிடையே வீபூதி தட்டத்தில் கற்பூரம் கொழுத்தி
ஓம்கார வடிவில் தீபம் காட்ட
நிறைவாக திரு பல்லாண்டுடன் கைதட்டி
வீபூதி சந்தனம் தீர்த்தம் மேனியை அலங்கரிக்க
காதில் பூச்சூடி
கும்பம் கலைத்து
படையலில் கொஞ்சம் கிள்ளி
வெளியே வைத்து
அந்த சின்ன வீட்டில் குட்டி வாழையிலையிட்டு
சர்க்கரை பொங்கலும்
அவலும் கடலையும் கூடவே கற்கண்டும்
கூடி உண்டு
ஆடிப் பாடி மகிழ்ந்த நாட்கள்
அன்றைய நவ ராத்திரி பூஜை…!
நவா
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]