முள்ளிவாய்க்காலின் முடிவு இப்படி ஆகும் என்று எண்ணியிருக்காத எத்தனை ஆயிரம் ஆன்மாக்கள் இன்னும் உலாவி வரும் புனித பூமி அது. ஆண்டுக்கு ஒரு தடவை அவர்களின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பெற்றாலும் நாளாந்தம் நம் நினைவில் நின்று நிலைப்பவர்கள் அந்த ஆன்மாக்குரியவர்கள் என்பதை ஆட்சிக் கரங்களின் சொந்தக்காரர்களுக்கு புரியவில்லை போலும்.காடுகளின் மத்தியில் அந்த ஆன்மாக்களின் விடுதலையை நோக்கிய தவ வாழ்வு தொடர்ந்தாலும், உலகத்தையே தங்கள் கைளுக்குள் வைத்திருந்த விண்ணர்கள் அவர்கள். கொழும்பில் உள்ள ஆட்சி அதிகாரம் உள்ளவர்களால் பெற்றுவிட முடியாத பல கருவிகளை தம் வசத்தே வைத்திருந்து காலம் வரும் வரையில் கண்விழித்து காத்திருந்தவர்கள் அவர்கள்.
வீரத்தால் திளைத்தவர்கள், விடுதலையின் வேட்கையினால் உறுதி பெற்றவர்கள், அரசியல் ஆற்றல் கொண்ட அறிவுத்திறன் படைத்தவர்கள், முப்படை கொண்ட சிறு நாட்டை முழுமையாக காக்கும் வகையில் கால் நோக காவல் பரிந்தவர்கள், ஆண், பெண் போராளிகள், கலைத்துவமும் கனிவும் கொண்டு கடுமையாக உழைத்தவர்கள, விவசாயிகள், தொழிலாளிகள், அன்னையர்கள் தந்தையர்கள், காலிழந்தோர், கையிழந்தோர், அப்பாவிக் குழந்தைகள், கர்ப்பிணிகள். இவ்வாறு எத்தனை வகையான நம் உறவுகள் அங்கு இறுதிவரை தங்கள் வாழ்வை நகர்த்திக்கொண்டார்கள்.
சதித்திட்டம் தீட்டி, உலகமே அந்த வன்னி மண்ணை ஆக்கிரமித்து நிலத்திலும் ஆகாயத்திலும் வலம் வந்து வஞ்சகம் தீர்க்கும் மனதோடு, சுதந்திரத்தின் விளை நிலமான அந்த மண்ணை நிர்மூலமாக்கினரே. இரத்தமும் சதைகளுமாய் எங்கும் சிதறிக் கிடந்த தங்கள் உறவுகளின் உடல்களை கண்டும் கதறியும், மனதைக் கல்லாக்கிய கொடியவர்களின் கரங்களுக்குள் அகப்பட்ட எஞ்சியோர் அடைந்த இன்னல்கள் ஏராளம் ஏராளம்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் எத்தனை கதைகள் எழுந்து வர துடிக்கின்றன. கவிதைகளால் அங்கு நிகழ்ந்த படுகொலைளின் கொடுமைகளை பாடக் கேட்டு பதறுகின்றோம்.
ஆண்டுக்கு ஒரு தடவை வரும் அந்த புனிதர்களின் நினைவு நாளில் ஒரேயொரு தூபிக்கு முன்பாக நின்று துயர் பகிரும் சந்தர்ப்பம் எம்மிடமிருந்து மீண்டும் மீண்டும் பறிக்கப்படுகின்றது.
மரணித்தவர்களின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சக் கட்டம். அன்று உலகின் பல நாடுகளுக்குச் சொந்தமான இராணுவக் கொடியோர் அழித்த அந்த ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்த ஆட்சி மொழி பேசும் இராணுவமும் பொலிஸும் அந்த இடத்தில் தங்கியிருந்து ஆயுதங்களைக் காட்டி எம் மக்களை அச்சுறுத்துகின்றன.
அநீதிகளுக்கெல்லாம் ஆதி மூலமாய் விளங்கும் முள்ளிவாய்க்கால் தூபியை அந்த மண்ணிற்கு சென்று வணங்கிட முடியாத இந்த நாட்கள் மேலும் எம் மனங்களை உறுதியாக்க வேண்டும்.
எழுதியவர்: நாகமணி லோகேந்திரலிங்கம்