தாய்வான் Far Eastern வங்கியில் இருந்து காணாமல் போன 1.1 மில்லியன் டொலர் பணம் , Litro Gas நிறுவனத்தின் தலைவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் தலைவர் ஷலிலா முணசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கணக்கில் இருந்து பணத்தை மீளப்பெற வந்த நபரொருவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
குறித்த வங்கியின் கணணி அமைப்பில் அத்துமீறி பிரவேசித்து அதன் நிதியை இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கணக்குகளுக்கு பரிமாற்றியது தொடர்பில் தற்போதைய நிலையில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தாய்வான் பிரதமர் விலியம் லாய் , அந்நாட்டு வங்கித் தகவல் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாய்வான் வங்கியின் நிதி மேற்பார்வை ஆணையம் இந்த ஊடுருவல் குறித்து தற்போதைய நிலையில் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹேக்கர்களின் அத்துமீறல் காரணமாக வங்கியின் கணணி அமைப்பு போன்று அதன் சர்வதேச நிதி பரிமாற்றம் அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது