இலங்கை இன்று பொருளாதாரம் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் நிலையினால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிய போதும் கடந்த காலத்தில் இடம்பெற்ற போர் மீறல்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்காமையும் இன்னொரு நெருக்கடி முட்களாய் அரசை குத்துகின்றன.
இலங்கை என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியில் இன்று சிக்கித் தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை தங்கம் போல் உயர்ந்து செல்கிறது. அத்துடன் பல பொருட்கள் இல்லாத தட்டுப்பாட்டு நிலையே தலை விரித்தாடுகிறது.
மற்றொரு புறத்தில் உறுதியான அரசை அமைக்க முடியாமல் எதிர்தரப்பிடம் இருந்தும் ஆளும் கட்சிக்குள் இருந்தும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசு தனது வரலாற்றை திருத்தி எழுத ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பெருமளவான காலத்தில் ஆட்சியை மேற்கொள்ளும் ராஜபக்ச தரப்பினர் எதிர்காலத்திலும் ஆட்சியை பிடிக்கும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்கள்மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி எதிர்கால சவாலாகவும் இருக்கிறது.
இந்த நிலையில் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் தீர்வையும் வழங்கும் முகமான செயற்பாடுகளை முன்னெடுத்து நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றினை ராஜபக்வினர் முன்வைத்து தமிழர் ஆதரவை பெறலாம் அல்லவா?
இதன் ஊடாக ஆட்சியை தக்க வைப்பதுடன் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார ஆதரவும் கிடைக்கும். அத்துடன் ராஜபக்சவினர் எதிர்பார்ப்பதுபோல நீண்ட ஆட்சியை இலங்கையில் மேற்கொள்ள ஏதுவாகவும் அமையும்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கறைபட்ட தமது வரலாற்றை ராஜபக்சவினர் திருத்தி எழுத முடியும். சிங்கள மக்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்ற ராஜபக்சவினர் இதைச் செய்தால் இலங்கைத் தீவின் வரலாறே மாறும் அதிசயமும் நிகழும்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
கிருபா பிள்ளையின் அண்மைய பதிவுகள்