இலங்கையின் அரசியல் நிலவரம் பாரிய கலவரத்திற்கும் குழப்பிற்கும் உள்ளாகியுள்ளது. ஜனநாயகமும் மக்கள் ஆணையும் முதன்மை பெற்ற இன்றைய உலக சூழலில் இலங்கையின் குழப்பத்தில் நாம் நிதானமாக நகர வேண்டும்.
இலங்கையில் இதுவரையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினமா செய்துள்ளார். அதனால் இலங்கையின் பொருளாதரம் மாறிவிடும் என்றோ நிமிர்ந்துவிடும் என்றோ கூற முடியாதுதான்.
ஆனால் புதிய ஆட்சியை அமைக்க வேண்டிய தேவையும் அதன் வழி சிங்கள தேசத்தின் இன்றைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. சஜித் அல்லது அவரைப் போன்ற தரப்பினர் ஆட்சியை கைப்பற்றலாம்.
இவர்களுக்கு தமிழ் தலைமைகளின் ஆதரவு தேவைப்படும். தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என்றும் 13ஐ நடைமுறைப்படுத்துவோம் என்றும் சஜித் மற்றும் அவர் தரப்பினர் கடந்த காலத்தில் கூறினர்.
ஆனால் நடைமுறையில் இவர்கள் எந்த தீர்வையும் வழங்காமல் ஈழத் தமிழ் இனத்தை ஏமாற்றி தமது நலன்களை சாதித்தமையைத்தான் கடந்த கால கசப்பான வரலாற்றில் கண்டு வந்திருக்கிறோம்.
எனவே எழுத்து மூல ஆவண அடிப்படையில்தான் புதிய ஆட்சித் தரப்புக்கு தமிழ் தலைமைகள் ஆதரவு வழங்க வேண்டும். வாய்மொழி வாக்குறுதிகளை நம்பி கடந்த காலம் போல ஏமாறக் கூடாது என்பதை இனத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
-கிருபா பிள்ளை