எங்கள் தமிழ் தலைமைகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன? தமிழ் மக்களுக்கு அரசில் தீர்வை வென்று தருகிறோம் என்று கூறி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்றைக்கு சத்தம் இல்லாமல் இருப்பது ஏன்?
இந்தியாவில் இருந்து சில பிரதிநிதிகள் வருவதும் இலங்கை அரச தரப்பினரை சந்திப்பதும் பிறகு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதும் கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான நிகழ்வுகளாக நடக்கின்றன.
அதற்கு அடுத்து எந்த முன்னேற்றமும் இல்லை. இலங்கையில் நீளும் இனப்பிரச்சினைக்கு குறைந்தது, இந்தியாவினால் இலங்கைக்கு முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?
இலங்கை அரசு போரின் போது 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றது. அதைச் சொல்லித்தான் இனப்படுகொலைப் போரை தமிழ் மக்கள்மீது ஏவியது. அதனால் லட்சம் உயிர்களை இழந்தோம். இன்றும் 13உம் இல்லை. ஒன்றும் இல்லை.
இனியும் தாயக மக்களையும் புலம்பெயர் மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் ஏமாற்ற முடியாது. தமிழீழம் கேட்கத்தான் தமிழ் தலைவர்களுக்கு பயம். 13ஐக்கூட கேட்கப் பயம் என்றால் ஏன் பதவியில் இருந்து தமிழ் இனத்திற்கு துரோகம் செய்ய வேண்டும்?
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் ஆகிவிட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை. எதிர்வரும் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கு புலம்பெயர் தேச மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. உன்னத இலட்சியத்தை மறக்காமல் பயணிப்போம்
அன்புடன்
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]