தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி தென்னிந்திய எல்லைகளுக்கும் காவலாக இருந்தார்கள் என்ற உண்மையை இந்தியா உணர வேண்டிய அரசியல் சூழ்நிலை தற்போது தெளிவாகத் தென்படுகிறது. இதனால்தான் இலங்கைத் தலைநகரில் மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சீனா தன் காலை அகலப்பதிக்க முயல்கின்றது.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட சிறீலங்காவுக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழு வடக்கில் மூன்று நாட்கள் தங்கியிருந்தது. அத்துடன் வடக்கில் இருந்து “எவ்வளவு தூரத்தில் இந்தியா இருக்கிறது” என்று இந்தியாவை நோக்கிய விதம் இந்தியாவுக்கான சீனாவின் பகிரங்க போர் எச்சரிக்கையே ஆகும். ஆனால் இந்த எச்சரிக்கை இந்தியாவுக்கு இன்னமும் கேட்கவில்லையா? தெரியவில்லையா?
இலங்கையின் தலைநகரம் கொழும்பில் துறைமுக நகரத்தை ஆக்கிரமித்தமையின் வாயிலாக இலங்கையில் சீனா ஒரு மாநிலமாக மாறி வருகின்றது. அத்துடன் இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை துறைமுகமும் சீனாவின் கைகளுக்குச் சென்றுள்ள நிலையில், தமிழர்களின் தாயகமான வடக்கை சீனா இலக்கு வைத்துள்ளது. இலங்கையில் சீனா ஊடுருவுவது இந்தியாவை இலக்கு வைத்தே என்ற கணிப்பை சீனாவின் வடக்குமீதான பயண உத்திகள் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியாவின் எல்லைப் புறங்கள் பதற்றங்களை கொண்டிருந்த போதும் தென்னிந்திய கடற் பகுதியில் அமைதி நிலவி வந்தது. முன்னைய காலத்தில் விடுதலைப் புலிகளும் அந்த அமைதிக்குப் பங்களித்தனர். இப்போது புலிகள் இல்லாத நிலையில், இலங்கை வழியாக தென்னிந்தியாவின் கதவுகளைத் தட்டுகிறது சீனா. அதாவது இந்தியாவின் கொல்லைப் புறத்தில் வந்து நிற்கிறது.
ஆனால் இன்னமும் இந்தியா இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்காமல் இருக்கிறது. தமிழர்களின் தீர்வு விடயத்தில் இந்தியா இதயசுத்தியுடன் செயலாற்ற வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் மாநில சுயாட்சி இடம்பெற இந்தியா உதவ வேண்டும். அதன் வாயிலாகவே சீனாவின் தலையீட்டை தவிர்க்கலாம் என்பதே உண்மையான நிலவரமாகும்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]