உலகமே இப்போது ஆப்கானிஸ்தானை நோக்கியே பார்வையை செலுத்திக் கொண்டிருக்கிறது. தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி ஆட்சி செலுத்துகின்ற நிலையில் இனவிடுதலைக்காக போராடிய ஈழத் தமிழ் மக்களுக்கு பல ஏக்கங்களுடன் அந்நாட்டின்மீது கவனம் குவிகின்றது.
ஈழத் தமிழினம் ஒன்றுபட்டு நின்றிருந்தால் துரோகங்கள் இல்லாமல் இருந்திருந்திருந்தால் தமிழீழத்தை தலைவர் பிரபாகரன் இன்றைக்கு ஆட்சி செய்திருக்கும் நிலமை ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவலையை வெளியிடுகின்றனர்.
ஆப்கானிஸ்தானை ஈழத்துடன் ஒப்பிட முடியுமா? நிச்சயமாக முடியாது. அத்துடன் தலிபான்களை விடுதலைப் புலிகளையும் ஒப்பிட முடியாது. ஆப்கானிஸ்தானில் அந்நாட்டை சேர்ந்த தலிபான் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன் தலிபான் ஒரு மத அடிப்படைவாத இயக்கம். ஆனால் ஈழத்தில் நடந்த போராட்டம், சிங்கள அரசின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கைப்பற்றுவதாற்கான போராட்டம்.
அத்துடன் விடுதலைப் புலிகள் இனவிடுதலைக்காகவும் நிலவிடுதலைக்காகவும் போராடியவர்கள். ஆகவே ஒப்பிடவே முடியாது. விடுதலைப் புலிகளின் தியாகத்தையும் உன்னத பக்கங்களையும் உலகம் நன்கு அறியும். எதிரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் தலிபான்கன் அப்படியல்ல. மிக மோசமான பயங்கரவாதிகளாக அவர்கள் கருதப்படுகின்றனர்.
ஆனால் இந்தப் பயங்கரவாதம் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கும் நிலையில், நாம் ஒன்றிணைந்து துரோகங்களின்றி போராடியிருந்தால் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டமும் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதை உணர்த்துகின்றது. அப்படி நாம் ஒன்றுபட்டு பலம் பெற்றிருந்தால், வடக்கு கிழக்கை தலைவர் பிரபாகரன் முழுமையாக கைப்பற்றியிருக்கும் ஒரு சூழல் ஏற்படவும் அதன் வாயிலாக ஒரு ஆட்சியை ஏற்படுத்த அதனை உலகம் அங்கீகரிக்கின்ற நிலமை வந்திருக்கும் என்பதும் நமது ஏக்கமாகும்.
-கிருபா கிசான்