தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழியே தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்த்தி வருகின்றது. உட்கட்சி மோதல் மற்றும் தலைமைப் போட்டியால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை கூட்டமைப்பு சிதைத்து வருகின்றமை கண்டனத்திற்குரியது.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நீதிக்காக உழைக்க வேண்டிய தருணத்தில் ஒருவருடன் ஒருவர் மோதி தமது சுயநல அரசியலுக்காக இனத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர்.
தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயலாற்றப் போவதாக அண்மையில் அறிவித்து சில சந்திப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் அதிலிருந்து வெளியேறி உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறான அணுகுமுறைகள் காரணமாகவே இத் துரதிஸ்டமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாறுபட்ட பாதையில் பயணித்த தமிழ் தலைவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் அரசியல் பிரிதிநிதிகள் தலைமையை உருவாக்கினார். அந்த வழியை கூட்டமைப்பு மறக்கக்கூடாது.
அன்றைக்கு சொல்வழி கேட்ட கூட்டமைப்பு இன்றைக்கு தலைக்கனத்தில் ஆடி குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாய் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றது. கூட்டமைப்பை சிதைக்க எதிரியே தேவையில்லை என்ற நிலையே காணப்படுகின்றது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற முதுமொழிக்கு இணங்க தமிழ் தலைமைகள் ஒன்றுபடுவதே காலத்தின் தேவையாகும். அப்படி ஒன்றுபட்டிருந்தால் என்றோ தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு தலைவிதி மாறியிருக்கும்.
எனவே இனியாவது ஒற்றுமைக்கு பங்கம் இன்றி உண்மையான விசுவாசத்துடன் சுயநல அரசியல் நோக்கின்றி, தலைமைப் பதவிப் போட்டியின்றி கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்பதையும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதை உடன் நிறுத்த வேண்டும் என்பதையும் பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பில் வேண்டி நிற்கிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]