பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காட்சிகளைப் பார்க்க நெஞ்சம் பதறுகிறது.
இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற பெரும்பான்மையின சகோதரரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். வன்கொலைகளால் பாதிக்கப்பட்ட இனம் என்ற வகையில் அதனைக ்கண்டு குமுறுகிறேன்.
பிரியந்த குமார தியவடன, கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார்.
சியால்கோட் நகரில் வாசிராபாத் சாலையில் இவரைத் தாக்கி, எரிக்கப்படும் நிகழ்வைக் காட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதனைக் கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
இதனை ஸ்ரீலங்கா அரசு ஏன் இன்னமும் கண்டிக்கவில்லை? இதனைக் கண்டித்து பெரும்பான்மையின சகோதரர்கள் ஏன் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிடவில்லை?
தமிழர்களை இனப்படுகொலை செய்கின்ற யுத்தில் பாகிஸ்தான் கைகொடுத்தது என்பதற்காகத்தான் ஸ்ரீலங்கா அரசு மௌனமாக இருக்கிறதா? விடுதலைப் புலிகளுக்கு எதிரான மல்டி பரலை பாகிஸ்தான் தந்தது என்றா மௌனம் காக்கிறது ஸ்ரீலங்கா?
பெருத்த வேதனையுடன் கண்டனம் செய்து கேள்வி எழுப்பி நிற்கிறேன். பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தில் ஒருவராக பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு அஞ்சலியும் ஆறுதலும்.
இதற்கான நீதி கிடைப்பது பெரும்பான்மையின சகோதரர்களின் கையில்தான் தங்கியுள்ளது.
கிருபா பிள்ளை
05.12.2021