அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றமை யாவரும் அறிந்ததே. அதில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பை இலங்கை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக இனப்பரம்பலை மாற்றியமைத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் என்பன உள்ளிட்ட நான்கு விடயங்களை தற்போது தீர்ப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்தது.
அத்துடன் புதிய அரசியலமைப்பு வாயிலாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அதிகாரப்பகிர்வுக்கும்கூட அரசு சமிக்ஞை காட்டியுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்தாலும்கூட இவை எவையும் எழுத்து மூலமாக உறுதிசெய்யப்படவில்லை.
இந்த நிலையில், எப்படி புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசை நம்பி முதலீடுகளை மேற்கொள்வது? கடந்த கால வரலாறு என்பது ஈழத் தமிழ் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் இலங்கை அரசுகள் ஏமாற்றியமையைத்தான் கண்டு வந்துள்ளோம்.
அதேநேரம் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீளும் வகையில் புலம்பெயர் தேச தமிழ் மக்களால் முதலீடுகளை மேற்கொள்ளவும் வடக்கு கிழக்கு தாயகத்தை மீளமைக்கவும் முடியும்.
ஆனால் ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவு இலங்கைக்கு கிடைக்காது. எல்லாமே ஸ்ரீலங்கா அரசின் கையில்தான் இருக்கிறது. காத்திருந்து பார்ப்போம்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]