சர்வதேச நாணய நிதியத்துக்கு மீண்டும் செல்லாதவகையில் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டும்.
இதுதான் எங்களுக்கு முன்னிருக்கும் சவாலாகும். கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியுமாகும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
வறிய மக்களுக்கு வழங்கிவைப்பதற்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகளை விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வு கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பரிஸ் சமூகம் உட்டப உலக நாடுகள் எமக்கு உதவியாக இருந்தது.
இந்த உதவி கிடைத்த பின்னர் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், ஜனரஞ்கமற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்படுகிறது. நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துக்கு 16தடவைகள் சென்றிருக்கிறோம். தற்போது 17ஆவது தடவையாகவே சென்றிருக்கிறோம்.
அதனால் இதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை நாங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லாதவகையில் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் எங்களுக்கு முன்னிருக்கும் சவாலாகும். அதனை எங்களால் செய்ய முடியும்.
ஏனெனில் 1991இல் இந்தியாவும் இவ்வாறாதொரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருந்தது. என்றாலும் அவர்கள் கட்சி, நிறம் பேதங்களை மறந்து அவர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ததன் மூலம் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டார்கள்.
அதனால் நாங்கள் அரசியல் கட்சி பேதங்களை மறந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட்டாமல் எங்களாலும் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தொடர்ந்து உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. அதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து எமக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியின் மூலம் இலங்கை வங்குராேத்து என்ற அந்த அடையாளத்தை எமக்கு நீக்கிக்கொள்ள முடிந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
என்றாலும் இது ஆரம்பமாகும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுத்தால் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டி ஏற்படாது என்றார்.