அமெரிக்காவில் H1-B குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு வேலை அளிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை இது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதனால் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த H1-B குடியுரிமைதாரர்களின் துணைவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
H1-B குடியுரிமை பெற்றவர்களின் கணவன் அல்லது மனைவி கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை செய்து வருகின்றனர். இதனை தடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
H1-B குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கை துணைவர்கள் வேலை வாய்ப்பு பெறும் அங்கீகாரத்தை கடந்த 2015-ம் ஆண்டு ஒபாமா நிர்வாகம் அமல்படுத்தியது. இதனால் 2016-ம் ஆண்டில் H1-B குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கை துணைவர்கள் சுமார் 41,000 பேர் பணிவாய்ப்பு பெறும் உரிமையை பெற்றனர்.
நடப்பாண்டில் 36,000 பேர் அமெரிக்க வேலை வாய்ப்பு பெறும் உரிமை பெற்று இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் H4 குடியுரிமையில் அமெரிக்காவில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கர்களுக்கு பணியில் முன்னுரிமை கிடைக்கும் விதமாக மேற்கண்ட முடிவு எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.