‘தீர்க்க தரிசனம் மிக்க கல்வியாளர் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாதது’ என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் காலமாகிய ‘தீர்க்க தரிசனம் மிக்க கல்வியாளர் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக அவர்களின் மறைவு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சமூகவியல் துறையின் மூத்த பேராசிரியருமான சண்முகலிங்கன் வெளியிட்டுள்ள அஞ்சலியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்
“இலங்கையின் கல்விப்புல –சமூக மேம்பாட்டில் பெரும் பங்களித்த பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக தனித்துவமானவர். அவரது புலமைத்துறை பொறியியல் ; ஆயினும் சமூக விஞ்ஞான உள்ளோளியுடன் செயற்பட்ட ஒரு சமூகப் பொறியியலாளராகவே அவரின் தரிசனம் வாய்த்தது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்;வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர்,தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர்,உயர் தொழினுட்ப கல்வி நிறுவன பணிப்பாளர் நாயகம் என பணி எல்லை விரிந்தது. அவரது பணிகளுக்கெல்லாம் மகுடமாக இளைஞர் அமைதியின்மை தொடர்பான அவர் தலைமையில் அமைந்த ’ஜயதிலக அறிக்கை’ அமைந்ததென்றால் மிகையில்லை. கல்விச் சீர்திருத்தத்துக்கான அவர் முன்மொழிவுகளும் வழிகாட்டல்களும் காலத்தினாலாயவை ;இன்றைய எங்கள் மேம்பாட்டித்திட்டமிடலில் பெரிதும் கவனம் பெற வேண்டியவை.
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன்
இத்துணை பெருமைகளிடையேயும் ஆரவாரம் இல்லாத அவர் பக்குவம் எங்களுக்கெல்லாம் பெரும் பாடமாக விளங்கியது. அவரொடு பழகக் கிடைத்த பொழுதுகளின் பெறுமதி நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருப்பது. தீர்க்க தரிசனம் மிக்க அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது…” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.