கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கிய இனந்தெரியாத நபர்கள், அவரைக் கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த டானியல் நிஷாந்தன் (வயது 31) என்பவரையே இவ்வாறு கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்து வந்துள்ள ஏழுபேர் கொண்ட இனந்தெரியாத குழுவொன்று நேற்று (12.10.2024) இரவு 11மணியளவில் இவரது வீட்டுக்குள் நுழைந்து இவர்மீது தாக்குதலை நடாத்தியள்ளதுடன் கடத்திச் செல்லவும் முயன்றுள்ளது.
குறித்த இளைஞர் டானியல் நிஷாந்தன், இராணுவப் புலனாய்வாளர்களை எதிர்த்து பேசியதாகக் கூறி வீட்டில் உள்ள தூணில் கட்டி வைத்து தாக்கியதுடன் கொல்லாமல் விடமாட்டோம் என்றும் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் முன்னிலையில் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.
சம்பவத்தையடுத்து அயலவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு குறித்த வன்முறைக்குழு தப்பிச் சென்றுள்ளது. அத்துடன், உன்னை கொண்டு செல்லவே வந்தோம். இன்னொருநாள் உன்னை பார்த்துக்கொள்ளுகிறோம் என்றும் எம்மிடம் இருந்து நீ தப்ப முடியாது என்றும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குறித்த இளைஞரின் தாயார் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி 04ஆம் நாளன்று ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தின்போது அரசுக்கு எதிராக பாரிய போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிலையில் அந்த வீதியினால் சென்ற குறித்த இளைஞர் மற்றும் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் ஆகியோர்மீது இராணுவ புலனாய்வாளர்கள் வழிமறித்து விசாரணை மேற்கொள்ள முற்பட்ட வேளையில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞரை இராணுவப்புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பு பின்தொடர்ந்துள்ளது. இவரது வீட்டிடின் அருகிலும் வன்முறைக் குழு கண்காணித்து வந்துள்ள நிலையிலேயெ இந்த தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் அரங்கேறியுள்ளது.
போராட்டத்தில் தாம் கலந்துகொள்ளாத போதும் தன்னையும் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனையும் இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியதுடன் அதனைத் தட்டிக் கேட்ட தனக்கு வீடு புகுந்து தாக்கியதுடன் கடத்த முயற்சி மேற்கொண்டதுடன் கொலைமிரட்டல் விடுத்தும் சென்றுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட இளைஞர் மேலும் தெரிவித்துள்ளார்.