மன்னார் மர்ம கிணற்றில் மேலும் பல தடயப்பொருட்கள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இரண்டாவது நாளாகவும் இன்று, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்ற போது பல்வேறு தடயப்பொருட்கள் மீட்கப்பட்டன.
காலை 8 மணிமுதல் காலை 11 மணிவரை முதற்கட்டமாக அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது.
அகழ்வுப்பணியின் போது இதுவரை குறித்த கிணறு 100 சென்றி மீற்றர் வரை அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
இன்றயை அகழ்வின் போது தடயப்பொருளாக சந்தேகிக்கும் வகையில் முதலில் பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும் முள்ளுக்கம்பி துண்டுகள், கற்கள் என்பனவும் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
பின் காலை 11 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 2 மணியளவில் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது ஜே.சி.பி பெக்கோ இயந்திரம் மூலம் குறித்த கிணற்றின் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தோண்டத் தோண்ட நீர் பெருக்கொடுக்கத்தொடங்கியது.
சுமார் 12.8 அடி வரை ஜே.சி.பி பெக்கோ இயந்திரம் மூலம் குறித்த கிணற்றின் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த கிணற்றில் நீர் ஊற்று அதிகரித்தது. குறித்த அகழ்வின் போது மேலும் பல தடயப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாவிக்கப்படாத துப்பாக்கி ரவை-01 எலும்புத்துண்டுகள்-03, உப்பை, கம்பித்துண்டுகள் என மேலும் பல தடயப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிணற்றில் நீரின் பெருக்கெடுப்பு அதிகரித்தன் காரணத்தினால் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மாலை 5.35 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மாவட்ட சிரேஸ்ட சட்ட வைத்திய அதிகாரி டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணியில் அழைக்கப்பட்ட 13 அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் காணாமல் போன உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் கிணறு தோண்டும் இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
மீண்டும் 3 ஆவது தடவையாக நாளை காலை 8.30 மணிக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த கிணற்றைச் சூழ்ந்த பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.