விடுமுறைத் தினங்களில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அரசமைப்பு ரீதியாக எந்தவொரு சிக்கலும் கிடையாது என ஆளும் தரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மார்ச் 17 ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரை விசேட அரச விடுமுறைத் தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால வரையறையில், 4 நாட்கள் விடுமுறைத் தினமாக இருப்பதால், இதுதொடர்பாக சட்டமா அதிபரின் வியாக்கியானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்கும்போது, தெரிவிக்கப்பட்ட காரணங்கள் நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தில் 10 ஆம் அதிகாரம் 2 ஆம் உறுப்புரையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி மற்றும் வாக்கெடுப்பை நடத்தும் தினம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, அந்தச் சட்டத்தின் 10 ஆவது சரத்தின் முதலாவது ரோம இலக்க உறுப்புரிமைக்கு இணங்க, பௌர்ணமி அல்லது அரச விடுமுறைத் தினங்களில் வாக்கெடுப்பை நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால், இவ்வாறான தினங்களில் பொதுத் தேர்தலை நடத்த முடியாதே ஒழிய, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிடப்படவில்லை. இதன் ஊடாக வேட்புமனுத் தாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டுக்கு வரமுடியும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.