ISIS தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ: பிரான்ஸை அழித்து விடுவோம்!
பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியாரை கொன்றதாக சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அந்த நாட்டு ஜனாதிபதிக்கு பிரான்ஸ் நாட்டை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்திருந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ரூயன் நகருக்கு அருகே உள்ள செயிண்ட் எடுன்னே டூ ரவ்ரே என்ற பகுதியில் இருந்த தேவாலயத்தில் இரண்டு தீவிரவாதிகள் நுழைந்து அங்கிருந்த பாதிரியார், கன்னியாஸ்திரி மற்றும் பக்தர்கள் என 6 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
அப்போது, தகவலறிந்து பொலிசார் செல்வதற்குள் தீவிரவாதிகள் பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டனர். பின்பு பொலிசார் தீவிரவாதிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில், பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுள் ஒருவனான அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் தேவாலய தாக்குதலுக்கு முன்னதாகவே பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே ஒரு மிரட்டல் வீடியோ அனுப்பியுள்ளான்.
அந்த வீடியோவில் ‘காலங்கள் மாறி விட்டது, நாங்கள் அனுபவிக்கும் வேதனையை நீங்களும் அனுபவிப்பீர்கள். உங்கள் நாட்டை நாங்கள் அழிக்கப் போகிறோம்’ என பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், சிரியாவில் நடைபெறும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதங்களுக்கு எதிராக பன்னாட்டு படைகளை அனுப்பிய நாடுகளில் வசிக்கும் முஸ்லீம்கள் அனைவரையும் கத்தியால் குத்தி கொல்லுங்கள் என அப்டெல் மாலிக் நபில் பெட்டிட்ஜீன் குறிப்பிட்டிருந்தான்.
இந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.