திருடிய காரை துரத்திய பொலிசார்: சாலையில் நிகழ்ந்த விபரீத சம்பவம்
சுவிட்சர்லாந்து நாட்டில் போதை மருந்தில் மூழ்கிய நபர் ஒருவர் காரை திருடி தப்பியபோது சாலையில் பல்வேறு விபத்துக்களை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பிரிபோர்க் நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவு 8 மணியளவில் 31 வயதான நபர் ஒருவர் காரில் பெட்ரோல் நிலையம் சென்றுள்ளார்.
காரில் பெட்ரோலை நிரப்பிய பின்னர் ஊழியரிடம் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பியுள்ளார். உடனடியாக இச்சம்பவம் பொலிசாருக்கு புகாராக அளிக்கப்பட்டது.
இதே நகரில் ரோந்து பணியில் இருந்த பொலிசார் ஒருவர் உடனடியாக அந்த சாலைக்கு சென்று காரை துரத்தியுள்ளார்.
ஆனால், வேகத்தை கூட்டிய அந்நபர் வழிநெடுகிலும் சென்ற கார்கள் மீது பயங்கரமாக மோதியவாறு சென்றுள்ளார். இதில் 5 கார்கள் சேதமடைந்துள்ளன.
பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தோளில் காயமும் ஏற்பட்டது.
Murten நகரை நோக்கி விரைந்த அந்த காரை சில மணி நேரப்போராட்டத்திற்கு பிறகு பொலிசார் மடக்கி பிடித்தனர்.
நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் Neuchatel மாகாணத்தை சேர்ந்தவர் என்றும், அவரை காரை ஓட்டியபோது அவர் மது மற்றும் போதை மருந்து எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், நபர் ஓட்டி வந்தது திருடிய கார் என்பதால், காரை பறிமுதல் செய்துள்ள பொலிசார் அவரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.