இந்தியாவை சமாளிக்குமா மேற்கிந்திய தீவுகள்? 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்காவில் தொடங்குகிறது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற நம்பிக்கையில் உள்ளது. தொடக்க வீரர் முரளி விஜய் காயம் காரணமாக இந்த டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
இருப்பினும் அந்த அணி துடுப்பாட்டத்தில் சிறப்பான நிலையில் உள்ளது. அதே போல் பந்துவீச்சு கூட்டணியும் சிறப்பாக அமைந்து அணிக்கு பலமாக இருக்கிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை இந்தியாவின் சுழல் தொல்லையை சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பெரிய ஓட்டங்களை குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் அசத்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்கு தொல்லை தரலாம்.
இந்த மைதானம் வேகத்திற்கு சாதகமான மைதானமாக இருப்பதால் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். 1998ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடந்த 15 போட்டிகளிலும் முடிவு கிடைத்துள்ளது.
2வது டெஸ்ட் நடக்கும் ஜமைக்கா மைதானத்தில் அடுத்த 4 நாட்களும் மழைவர வாய்ப்பு உள்ளது. இதனால் மழையும் போட்டியில் முக்கிய பங்கு வகிக்கலாம்.