தர்ஷன் உடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் செய்யாமல் என்னை ஏமாற்றுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபலமானவர் தர்ஷன். இவரும், நடிகை சனம் ஷெட்டியும் காதலித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இது வெளியே வந்தது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தனர். இந்நிலையில் தர்ஷன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் சனம் ஷெட்டி.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019, மே 12ல் எனக்கும், தர்ஷனுக்கும் இருவீட்டாரது குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் திருமணம் செய்யலாம் என்று இருந்தோம். ஆனால் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததால் திருமணத்தை தள்ளி வைக்கும்படி கூறினார். நானும் சரி என்றேன். நிச்சயதார்த்தம் நடந்ததை கூட வெளியே சொல்லக்கூடாது என்றார். நானும் அதை கடைபிடித்தேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு நல்ல பெயரை வாங்கி வந்தது. எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பம் அனுப்பியது முதல் தர்ஷன் புகழ் பெற்றது வரை என்னால் தான். அவருக்காக என் பணத்தை ரூ.15 லட்சம் செலவு செய்துள்ளேன். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு ஆளே மாறிவிட்டார். திருமணத்தை நிறுத்தினார். பேச முயன்றால் அவமானப்படுத்தினார்.