பிரித்தானியா உத்தியோகபூர்வமாக இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 11:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது.
எனினும், பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 11 மாத நிலைமாற்ற காலம் உள்ளமையால், பெரும்பாலான விடயங்கள் அப்படியே இருக்கும் என்றும் சில மாற்றங்கள் மட்டும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இழக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரெக்ஸிற் தருணத்தில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அரசியல் நிறுவனங்களையும் அமைப்புக்களையும் விட்டு வெளியேறும்.
எவ்வாறாயினும், நிலைமாற்றக் காலத்தில் ஐரோப்பிய நீதிமன்ற விதிகளை பிரித்தானியா பின்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் உச்சி மாநாட்டில் ஏனைய தலைவர்களுடன் சேர விரும்பினால் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் சிறப்பாக அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
மீன்பிடி எல்லைகள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் வழக்கமான ஐரோப்பிய ஒன்றியக் கூட்டங்களில் பிரித்தானிய அமைச்சர்கள் இனி கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பிரெக்ஸிற்னால், பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் பிரித்தானியா பேச்சுக்களை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏதேனும் வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டால், நிலைமாற்றக் காலம் முடியும் வரை அவற்றைத் தொடங்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த வெளியேற்றத்துடன், 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ள பேர்கன்டி நிறக் கடவுச்சீட்டு நீல நிறத்துக்கு மாறவுள்ளமையும் விசேட அம்சமாகும்.
இந்த புதிய நிறக் கடவுச்சீட்டு பல மாதங்களில் படிப்படியாக வழங்கப்படும் என்றும் அனைத்துப் புதிய கடவுச்சீட்டுக்களும் ஆண்டின் நடுப்பகுதியில் நீல நிறத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.
பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளைக் கையாண்ட குழு பிரெக்ஸிற் நாளில் கலைக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நடவடிக்கைகளுக்காக பிரெக்ஸிற் திணைக்களம் முன்னாள் பிரதமர் தெரேசா மே யினால் 2016 இல் அமைக்கப்பட்டது.
இனி மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தைகளுக்காக இந்தக் குழு டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.