‘சபாஷ் நாயுடு’வுக்கு முன் ‘விஸ்வரூபம் 2’ வெளியிட கமல் திட்டம்
‘விஸ்வரூபம்’ வெளியான உடனே, ‘விஸ்வரூபம் 2’ படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
‘விஸ்வரூபம் 2’ படத்திற்கான பணிகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்தியதால், ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்து வந்தார். ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என கமல் நடிப்பில் உருவான படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் ‘விஸ்வரூபம் 2’ வெளியீடு எப்போதும் என்ற கேள்வி எழுந்தது.
சமீபத்தில் நடைபெற்ற ‘முடிஞ்சா இவன பிடி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.எஸ்.ரவிகுமார் “கமலை சந்தித்த போது ‘விஸ்வரூபம் 2’ ட்ரெய்லரை அவர் காட்டினார். அற்புதமாக இருந்தது” என தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ நிலை குறித்து விசாரித்த போது, “‘சபாஷ் நாயுடு’ படத்துக்கு முன்பாகவே ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பணிகளை முடித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எப்போது என்பது முடிவாகவில்லை. மருத்துவமனையில் இருந்து கமல் திரும்பியவுடன் முடிவு செய்வார். ஆனால் படத்தின் ட்ரெய்லர் பணிகள் முடிந்து தயாராகி இருப்பது உண்மை தான்.” என்று தெரிவித்தார்கள்.
மேலும், ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்து ‘விஸ்வரூபம் 2’ படத்தை ராஜ்கமல் நிறுவனம் திரும்ப கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.