பிரிட்டனில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், படித்து முடித்த பிறகு 2 ஆண்டுகள் வரை அங்கு தங்குவதற்கு வழிசெய்யும் வகையில் விசா விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
பிரிட்டனின் முன்னாள் பிரதமரான தெரெசா மே, 2012ஆம் ஆண்டில் அந்நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த போது, மாணவர்களுக்கான விசா விதியில் மாற்றம் கொண்டு வந்தார். அதன்படி, பிரிட்டனில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு வெறும் 4 மாதங்கள் மட்டுமே அங்கு தங்கி இருந்து வேலை தேட முடியும். வேலை கிடைக்காத பட்சத்தில் காலக்கெடுவுக்குப் பின் அவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேற நேரிடும்.
தெரெசா மே கொண்டு வந்த இந்த விசா விதிகளை மாற்ற, பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்தார். அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள், படிப்பு முடிந்த பின்னரும் கூட இரண்டு ஆண்டுகள் வரை பிரிட்டனில் தங்கி இருந்து வேலை தேடும் வகையிலும், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் வகையிலும் விசா விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல், இது நடைமுறைக்கு வரவுள்ளதால் கடந்த ஆண்டு, பிரிட்டனில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 4 லட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் பயன்பெறுவர். அதேவேளையில், அண்மையில் படித்து முடித்தவர்களுக்கு இது பொருந்தாது. பிரிட்டன் பொருளாதாரத்தில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், இப்படி ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதற்கு அமைச்சர்களும், மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் வெளிநாட்டு மாணவர்கள் கொல்லைப்புறமாக வேலைக்கு சேரும் வழியை, விசா திருத்தம் ஏற்படுத்திக் கொடுத்து விடும் என்று குடியேற்றக் கொள்கை தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் அமைப்பு கூறியுள்ளது.