பொதுஜன பெரமுன தனது சின்னத்தை மாற்றினால்தான், ஆதரவு வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தயாசிறி மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய பிரதமர் மோடியின் தேர்தல் சின்னம் மலர் மொட்டு ஆகும். இதனாலேயே இந்தியாவில் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை.
இதேபோன்றுதான் இந்த மலர் மொட்டு சின்னத்தை, எமது நாட்டிலுள்ள சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களும் பார்க்கின்றனர்.
மேலும் தேர்தலின்போது நாட்டிலுள்ள சகல தரப்பினரையும் ஒரு கட்சி அனுசரித்தே செல்ல வேண்டும். அப்போதுதான், தேர்தலில் வெற்றி சாத்தியமாகும்.
இதனால் கூட்டணி அமைப்பதாயின் கட்சியின் பெயர், சின்னம் என்பனவற்றை மாற்றுவதற்கு பொதுஜன பெரமுன உடன்பட வேண்டும்.
அதாவது இரு கட்சிகளுக்கும் பொதுவானதொரு சின்னத்தை அறிவிக்க பொதுஜன பெரமுன ஒப்புதல் வழங்கினால் கூட்டணி அமைப்பது குறித்து தீர்மானிப்போம்.
இல்லாவிடின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் தனியாக களமிறங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.