முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சத்தியக்கடதாசியை நீக்குவதா இல்லையா என்ற தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி ஒன்றினை முன்வைத்துள்ளார்.
குறித்த சத்தியக்கடதாசியில் பகைமை உணர்வுடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் தமக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாக பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி, அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் நெருங்கிய அரசியல் தொடர்புகளைக் கொண்ட சிலருடன் இணைந்து பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு தாம் சூழ்ச்சி செய்வதாக ஜூலை 17 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட குறித்த சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் பிரதான சட்ட அதிகாரியான தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இந்த சத்தியகடதாசியின் மூலம் பிரதிவாதி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்ட எந்த அரசியல்வாதியிடமும் தான் கலந்துரையாடவில்லையெனவும் அதற்கான அவசியம் காணப்படவில்லையெனவும் சட்ட மா அதிபர் இதன்போது குறிப்பிட்;டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து வாய்வழி மூலமாக முன்வைக்கப்பட்ட விடயங்களை இன்று காலை 10.30 மணிக்கு முன்னர் எழுத்து மூல சமர்ப்பணமாக மன்றில் முன்வைக்குமாறு எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் சட்ட மா அதிபருக்கு அறிவித்திருந்தது.
இந்தநிலையிலேயே குறித்த எழுத்துமூல சமர்ப்பணத்தை ஆராய்ந்ததன் பின்னர் சத்தியக்கடதாசியை நீக்குவதா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்தது.