பாக்கிஸ்தானில் மற்றொரு இந்து பெண் கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாக்.,ல் சமீபத்தில் சீக்கிய பெண் ஒருவர் கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இது தொடர்பாக அப்பெண்ணின் குடும்பத்தினர் அரசிடம் முறையிட்டதுடன், போலீசிடமும் புகார் அளித்தனர். அப்பெண் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது உண்மையில்லை என அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சீக்கிய பெண் கடத்தப்பட்டதை எதிர்த்து பாக்.,லும், இந்தியாவிலும் சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாக்.,ல் மற்றொரு இந்துப் பெண் ஒருவரும் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்து, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அபெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரில், தனது மகள் பிபிஏ படிப்பதாகவும், ஆக.,29 ம் தேதி கல்லூரிக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை எனவும் கூறி உள்ளார்.
இது தொடர்பாக பாக்., ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கல்லூரிக்கு சென்ற அப்பெண்ணை, சக மாணவனான பாபர் அமான் என்பவன், பாகிஸ்தான் தக்ரிக் இ இன்ஷப் என்ற அமைப்பை சேர்ந்த மிசா தில்வார் என்பவனுடன் சேர்ந்து கடத்தி உள்ளான். அப்பெண்ணை பாக்., தக்ரிக் இ இன்ஷப் அமைப்பின் பயிற்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று, கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர். பின்னர் பாபர் அமானுக்கும் அப்பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி அடிப்படையில் பாபரின் சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அப்பெண் மற்றும் பாபர் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. கடந்த 2 மாதங்களில் இதுவரை சிறுபான்மை இனமான இந்து பெண்கள் 3 பேர் கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.