நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் என்.ஜி.கே., இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். முழு அரசியல் கதைக் களம் கொண்ட இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இருந்தபோதும், தன்னுடைய அடுத்தப் படமான காப்பான் படத்தை, நடிகர் சூர்யா ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், சூர்யாவோடு, ஆர்யா, சயிஷா மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் முழுமையாக முடிவடைந்து, சென்சார் சான்றிதழும் பெற்று விட்டது. இந்நிலையில், இந்தப் படத்தை ஆகஸ்டு 30ல் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில், மிகப் பிரம்மாண்டமாக தயாரான சாஹோ படம், ஆகஸ்டு 30ல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அந்தப் படத்தின் நாயகனான பிரபாஸ், தன்னுடைய படத்தை ஆகஸ்டு 30ல் ரிலீஸ் செய்வதற்காக, காப்பான் பட ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கக் கேட்டுக் கொள்ள, அதையேற்று, காப்பான் படம், செப்., 20ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பார்த்திபன் நடித்து இயக்கி இருக்கும் ஒத்த செருப்புப் படம், செப்., 20ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்பார்க்காத, காப்பான் படக் குழு திடுமென அதிர்ச்சியாகி இருக்கிறது.
ஏற்கனவே, பல ஆண்டுகளுக்கு முன், இதே போலவே, நடிகர் சூர்யா நடிப்பில் உருவான அஞ்சான் படமும், பார்த்திபன் இயக்கத்தில் உருவான கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படமும் ஒரே நாளில் மோதின. அதேபோன்றதொரு நிலை, பல வருடங்களுக்குப் பின், இப்போது ஏற்பட்டிருப்பதாக இருப் படக் குழுவினரும் தெரிவிக்கின்றனர்.