பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணிப்பகஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்தே இன்று அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம்பெறவில்லை.
தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் திரும்பி செல்ல நேரிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.