1980-90களில் தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின் அரசியல் பக்கம் போனார். ஆனால் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற விஜயசாந்திக்கு அரசியலில் பெரிதாக வெற்றி கிடைக்க வில்லை. அதனால் 13 ஆண்டுகளுக்குப்பின் தற்போது மீண்டும் மகேஷ்பாபு நடித்து வரும் சரிலேரு நீகேவரு என்ற தெலுங்கு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜகவை வளர்க்க நினைக்கும் அக்கட்சியினர் அவரை பாஜகவிற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதையடுத்து விஜயசாந்தி, பாஜகவில் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அந்த செய்தியை விஜயசாந்தி மறுத்துள்ளார். பாஜகவினர் என்னை அழைத்தது உண்மை. ஆனால் எனக்கு மீண்டும் அரசியலில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் எண்ணம் இல்லை. அதனால் காங்கிரசில் இருந்தபடியே சினிமாவில் அதிகப்படியான கவனம் செலுத்தவே ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.