ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் இப்பிரச்சினையில் தலையிட மறுத்துவிட்டன. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில், கடந்த 1974ம் ஆண்டில் ஐநா.பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்வை வழங்கியது. அதன்படி ,இருநாடுகளும் அமைதியான சமரச முயற்சிகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது.சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் மீறிவிட்டதாக புகார் தெரிவித்து பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயற்சித்தது.
ஆனால் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் சேர்த்துதான் ஐநா.சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது. பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதம் ஏவப்படுவதையும் அதற்கு பாகிஸ்தான் அரசும் ராணுவமும் உடந்தையாக இருப்பதாகவும் இந்தியா சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி எழுதிய கடிதத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துவிட்டது.
பாகிஸ்தானின் கடிதத்தை ஏற்க முடியாது என்றும் அதன் எந்தவித கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மாரியா ஃபெர்ணான்டா எஸ்பினோசா காரசஸ் தெரிவித்துள்ளார்.
1954ம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தின் படி 370 சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு வழங்கப்பட்டதாகவும், 2019ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் அது அடங்காது என்றும் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.
இதே போல் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் தலையீட்டைக் கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை அமெரிக்காவும் சீனாவும் நிராகரித்துவிட்டன. அமெரிக்கா செய்தித் தொடர்பாளர் ஒருவர் காஷ்மீர் பிரச்சினையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இதில் அமெரிக்கா தலையிடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதே போன்று பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவும் இந்தியாவும் பாகிஸ்தானும் சமமான அளவு நட்பு கொண்ட அண்டை நாடுகள் என்று தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையை இரு நாடுகளும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுமாறு சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசிய குரேஷிக்கு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.