சீனாவில், கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கடலோர நகரத்தை, புயல் நெருங்கி வருவதால், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பேரிடர் மற்றும் மீட்பு படையினர், அரசு அதிகாரிகள், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சீன நாட்டின் கிழக்கு கடற்கரையோரம், ஜீஜியாங் (Zhejiang) என்ற மாகாணம் அமைந்திருக்கிறது. இந்த மாகாணத்தை மையமாக கொண்டு, லெக்கிமா என்ற சூறாவளி புயல் நகர்ந்துவருகிறது.
இதனால், ஜீஜியாங் மாகாணத்தில் கடலோர நகரங்கள் அனைத்தும், உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 190 கிலோ மீட்டரில் இருந்து, 230 கிலோ மீட்டர் வரையில், மிக பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, தைவானை மையங்கொண்டு லெக்கிமா புயல் சுற்றி சுழன்று வருவதால், அங்கிருந்து, குறைந்த தொலைவில் உள்ள ஜீஜியாங் மாகாணத்தில், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
லெக்கிமா புயல் நாளை கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போதே, கிழக்கு சீன கடல், மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. தடுப்புச்சுவரை தாண்டி, பல அடி உயரத்திற்கு பேரலைகள் எழுந்து வருகின்றன.