சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஐ.தே.க. செயற்பட்டாலும் எமது அணி களமிறக்கும் வேட்பாளர்தான் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றியடைவாரென எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது,“ஐக்கிய தேசியக் கட்சி சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றது.
அக்கட்சி எவ்வாறு செயற்பட்டாலும், எதிர்வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது அணி வெற்றியடைவது உறுதி.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில், சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய என்று மூவருக்கிடையில் அரங்கேற இருந்த சமர் தற்போது சஜித், கரு என்று இருவருக்கிடையில் மூண்டுள்ளது.
இதனால் எவரை வேட்பாளராகக் களமிறக்குவது என்பது குறித்து ஐ.தே.க.இறுதி தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் அவதிப்படுகின்றது.
எனவே ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.தோல்வியடைவது உறுதி” என மஹிந்த தெரிவித்துள்ளார்.