பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினி நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் புதிய படம் சங்கத்தமிழன்.
விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் . இவர்களுடன் நாசர் , சூரி ,அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தென்காசி, குற்றாமல் பகுதியில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்காலில் நிறைவடைந்தது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நேற்று டப்பிங் பணிகள் ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது. டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தன் பகுதி வசனங்களுக்கு டப்பிங் பேசினார். செப்டம்பர் மாத இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.