நைஸ் தாக்குதலில் 84 பேர் பலி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதிகளின் திக் திக் நிமிடங்கள்
பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் நகரில் லொறி ஓட்டுனர் ஒருவன் நடத்திய கொடூர தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தம்பதி இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று இரவு Bastille Day என்ற தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அப்போது கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் நுழைந்த லொறி ஓட்டுனர் ஒருவர் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு மக்கள் மீது ஏற்றி லொறியை ஓட்டிச் சென்றுள்ளான்.
நள்ளிரவில் நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தில் இதுவரை 84 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நைஸ் நகரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக திருமணம் ஆன இந்தியாவை சேர்ந்த இளம் தம்பதி இருவர் சிக்கியுள்ளனர்.
ஜெய்ப்பூர் மாநிலத்தை சேர்ந்த அக்ஸாங்ஷா சிங் மற்றும் ஐஸ்வர்யா பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
நேற்று இரவு இருவரும் நைஸ் நகரில் நடைபெற்ற கொண்டாட்டத்திலும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, ஐஸ்வர்யாவிற்கு திடீரென பசி எடுத்ததால் அவர்கள் கூட்டத்தை விட்டு விலகி அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர்.
இருவரும் உள்ளே நுழைந்த அடுத்த நிமிடம் வெளியே மரண ஓலங்கள் எழுந்துள்ளன. துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்டுள்ளது.
பாரீஸில் நிகழ்ந்த தாக்குதல் போல் மற்றொரு சம்பவம் நிகழ்கிறது என்பதை உணர்ந்த இருவரும் வெளியேறி மறைவான இடத்திற்கு ஓடியுள்ளனர்.
கலைந்து ஓடும் கூட்டத்திற்கு மத்தியில் இருவரும் சிக்கியதால், சில மணி நேரம் இருவரும் தனியாக பிரிந்து செல்லும் சூழல் ஏற்பட்டு பிறகு ஒன்றான இணைந்துள்ளனர்.
சில மணி நேரங்களுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வர அங்கிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக தம்பதி இருவரும் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.
தம்பதியின் இந்த தகவலை தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும், இக்கொடூரமான சம்பவத்தில் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.