நாட்டின் அரசியலமைப்பு ஒரு சட்டமோ, அரசியல் கருத்திட்டமோ அல்லவெனவும், அது ஒரு சமூக ஒப்பந்தமே என்பதை நாட்டு மக்கள் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று(26) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம். பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகளை வெற்றியாக்குவதற்காக நாம் எம்மை அர்ப்பணித் துள்ளோம். அதற்கான வழி நடத்தல் குழு அனைத்திலும் நாங்கள் பங்கேற்றுள்ளோம். நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாம் பெரும் அக்கறையுடன் செயற்படுகின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது புதிய அரசியலமைப்பு திருத்தம், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினரும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக மாறிவிட்டார்.
புதிய அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் அவர் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு தற்போது அவர் தம் நிலைப்பாட்டிலிருந்து முற்றாக மாறி விட்டார் எனவும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.