மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பதுளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்குஅப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும்அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
நீர்கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.