நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறைந்து செல்வதாக புள்ளிவிபரவியல் தகவல்கள் தெரிவிப்பதனால், ஜேர்மனியைப் போன்று குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சிங்கள சனத்தொகையை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் திட்டமிடப்பட்ட செயற்பாடு குறித்து தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயற்பாட்டில் ஈடுபடுவது அடிப்படைவாதிகள் அல்லர் எனவும், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அரச குடும்ப நல சுகாதார பிரிவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ள வைத்தியசாலைக்கு சென்றால், குறித்த தாய்க்கு குடும்பக் கட்டுப்பாட்டை செய்து கொள்ளுமாறு கடுமையான பலவந்தத்தை இந்த தாதியர்கள் பிரயோகிக்கின்றனர்.
தற்பொழுது நாட்டில் பிறப்பு வீதம் குறைந்து வருவதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிப்பதனால், பிறப்பு வீதத்தை தூண்டும் வகையில் கொடுப்பனவைக் கொடுப்பதற்கு தமது கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் கம்மம்பில எம்.பி. மேலும் கூறினார்.