விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கடுமையாக சாடியிருந்தார்.
இந்தநிலையில் அதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது.
விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது.
இன்றுவரை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிட கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.