ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் 2 தமிழர்கள்!
பிரேசிலில் நடக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தகுதிச்சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆடவர் 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் திருப்பூரைச் சேர்ந்த அய்யாசாமி தருண் , திருச்சியைச் சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் அய்யாசாமி தருண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் ஊராட்சி ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
மாநில அளவில் 8 சாதனைகளையும், தேசிய அளவில் 6 சாதனைகளையும் படைத்துள்ள தருண், தேசிய அளவில் 40 பதக்கங்களை வென்றுள்ளார்.
இது தவிர இந்த ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கமும், 400 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கமும் வென்றுள்ளார்.
இதேபோல், ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கும் மற்றொரு தமிழரான ஆரோக்ய ராஜீவ், திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர்.
தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் ஆரோக்ய ராஜீவ், 2014ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.