அமெரிக்காவில் தொடரும் கறுப்பு இனத்தவர்களின் போராட்டம்: பலர் கைது
கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வெள்ளையின பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டுவரும் இனவெறித் தாக்குதல்களைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களின்போது, இதுவரை நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மின்னேசோடாவில் உள்ள செயின்ட் பவுலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சுமார் 102 பேரும், லூசியானாவின் படொன் ரூஜ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சுமார் 100 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை (ஜுலை 5) படொன் ரூஸ் பகுதியில் 37 வயதான Alton Sterling என்ற கறுப்பினத்தவரும், மறுதினம் (புதன்கிழமை) இரவு மின்னேசோடா புறநகர்ப் பகுதியில் 32 வயதான Philando Castile என்ற கறுப்பினத்தவரும் அமெரிக்கப் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டமையை அடுத்து, அண்மைய தினங்களாக அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை மற்றுமொரு கறுப்பினத்தவர் அமெரிக்க பொலிஸாரல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளையினப் பொலிஸாரின் இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொடர்ச்சியாக நாடு தழுவிய வகையில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் இவ்வாறான கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பொலிஸார் செயற்படுவதும் அதனை எதிர்த்து கறுப்பினத்தவர்கள் போராட்டங்களை நடத்துவதும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ள ஹிலரி கிளின்டனுக்கு பாரிய சவாலாக அமையவுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/65667.html#sthash.2g5A2EQq.dpuf