தென் சூடான் மோதலில் 150 பேர் உயிரிழப்பு: ஐ.நா முகாமில் தீவிர பாதுகாப்பு
தென் சூடானில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் வரையான மோதல்களின்போது 150 இற்கும் மேற்பட்ட படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் சூடான் ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பினருக்கும், முன்னாள் கிளர்ச்சிக் குழுத் தலைவரும் தற்போதைய முதல் துணை ஜனாதிபதியுமான ரிக் மக்காரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த சில தினங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் சுமார் 200 இற்கும் மேற்பட்ட மக்கள் தென் சூடான் தலைநகர் ஜுமாவில் அமைந்துள்ள ஐ.நா.பணியக வளாகத்தில் தஞ்சம் கோரியுள்ளனர்.
ஆயினும் நேற்று முன்தினம் பிற்பகலில் அங்கு தங்கியிருந்த அகதிகளுக்கும், ஐ.நா பணியாளர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை தோன்றியது. இதனையடுத்து அங்கு விரைந்த சீன அமைதி காக்கும் படையினர், நேபாள மற்றும் எதியோப்பிய தரைப்படை, ஐ.நா அமைதி காக்கும் பொலிஸார் ஆகியோர் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மோதல் நிலை காரணமாக ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையிலும் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஐ.நா அகதிகள் முகாமின் வடமேற்குப் பகுதியிலும் அதன் அண்மைய பகுதிகளிலும் 12 இற்கும் மேற்பட்ட ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தொடரும் மோதல்களை நிறுத்துமாறு நாட்டின் ஜனாதிபதியும், முதல் துணை ஜனாதிபதியும் தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும் அங்கு மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இவ்வாறு மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
– See more at: http://www.canadamirror.com/canada/65573.html#sthash.xWnp34WT.dpuf