இனப் பேதங்களை முன்னிலைப்படுத்தி, வன்முறைகளை மேற்கொள்ளும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சம்புத்த சாசனம் சீர்குலைவதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸமுல்ல கிரன சுபோதாராம விஹாரையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் பௌத்த சித்தாந்தங்களை பின்பற்றி அனைத்து இனத்தவர்களையும், மதங்களையும் பாதுகாத்து ஐக்கியத்துடன் வாழ வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்..
ஏனைய இனத்தவர் மற்றும் மதங்களின் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தி, சிங்கள பௌத்த அரசாங்கத்தை வலுவூட்ட முடியாது. அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்காக தேவையான நடைமுறை வலுவையும், பாதுகாப்பையும் பொதுமக்கள் வழங்காவிட்டால், பௌத்தம் வலுவடையாது.
சிசு தஹம் செவன வேலைத்திட்டத்தின் கீழ், மத்திய கலாசார நிதியத்தின் நிதியுதவி மூலம் இந்த அறநெறி பாடசாலைக் கட்டடம் நிர்மாணிக்கப்படுகிறது. இதற்காக 40 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அறநெறிக் கல்வியை வழங்குவதற்கு போதுமான கட்டட வசதி மற்றும் வளம் இல்லாத பின்தங்கிய பகுதிகளில் உள்ள பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளையும் மேம்படுத்தும் நோக்கில் சிசு தஹம் செவன வேலைத்திட்டம் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.