வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விரு பிரதான நகரங்களையும் மையப்படுத்திய சுமார் 30 முஸ்லிம் கிராமங்களில் இன்றிரவு 7 மணிவரையான 48 மணிநேர தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 ஜும் ஆ பள்ளிவாசல்கள் உட்பட 9 பள்ளிவாசல்கள், பெருமளவு முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த வன்முறை சூழல் குருணாகல் மாவட்டத்தில் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அளவுக்கு தீவிரமடைந்தமையால் அதனைக் கட்டுப்படுத்த இன்று மாலை 4.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் முழு வட மேல் மாகாணத்துக்கும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி வட மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் கீழ் உள்ள 47 பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போது வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்க பிரதேசத்தின் பொலிசாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பாதுகாப்பு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
குருணாகல் பொலிஸ் வலயத்தில் 11 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாபிட்டிய பொலிச் வலயத்தில் உள்ள 8 பொலிஸ் பிரிவுகளிலும், நிக்கவரட்டிய பொலிஸ் வலயத்தில் உள்ள 10 பொலிஸ் பிரிவுகளிலும், புத்தளம் பொலிஸ் வலயத்தில் உள்ள 11 பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபம் பொலிஸ் வலயத்தின் 7 பொலிஸ் பிரிவுகளிலும் இந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று குளியபிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெட்டிபொல வீதியில் நான்கு முஸ்லிம் கடைகள் மீது கும்பல் ஒன்று நடத்திய தககுதல்களுடன் குளியாபிட்டிய பகுதியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்மாகியிருந்தன.
குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்போரில் நலவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்றும் இன்றும் குளியாபிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிற்பகல் 2.00 மணியாகும் போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
நிலைமை மோசமடிந்ததை அடுத்து பின்னர் நிக்கவரட்டி பொலிஸ் வலயத்தில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி கொபேய்கனே மற்றும் ரஸ்னாயக்கபுர பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவற்றையும் மீறி வன்முறைகள் கட்ட விழ்த்துவிடப்படலாம் எனும் அச்சம் மற்றும் சில உளவுத் தகவல்களை மையப்படுத்தி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய முழு வட மேல் மாகாணத்துக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று குளியாபிட்டிய பொலிஸ் வலயத்துக்குட்பட்ட, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் குளியாபிட்டியவில் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்த போது, பிங்கிரிய பொலிஸ் பிரிவில் பாரிய வன்முறைகள் பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.