இனஅழிப்பிற்கு நீதிகோரி கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள மக்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது.
தமிழினப் இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இந்த போராட்டம் நடந்தது. ஒட்டாவா, மொன்றியால், டொரோண்டோவிலுள்ள தமிழர் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட போராட்டத்தில் பல நூற்று கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டிருந்தனர்.
முறைப்படி அனுமதி பெற்று ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக இந்த போராட்டம் நடந்தது.போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென பௌத்த பிக்குவொருவரின் தலைமையில் சுமார் 25 பேரை கொண்ட சிங்கள குழுவொன்று அங்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்டது.
இலங்கை கொடிகளுடன் வந்த அவர்கள், இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை, போரில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என கோசமிட்டனர் யுத்தத்தின் இறுதிப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் மருத்துவ சேவையாற்றிய வைத்தியர் வரதராஜனும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
ஒட்டாவா நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா வன்டென்பெல்ட்டும் கலந்து கொண்டு உரையாற்றினார். இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி தான் அறிந்து வைத்திருப்பதாகவும், தமது அரசாங்கம் ஐக்கிய நடுகல் அமைப்புடன் சேர்ந்து நிரந்தர சமாதானத்தை உருவாக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறினார்.