உலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை
ஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.
உலகின் மிக அரியவகை திராட்சை என கொண்டாடப்படும் ரூபி ரோமன்ஸ் வகை திராட்சை கொத்து ஒன்றை 7.36 லட்சம் ரூபாய் தந்து வாங்கியுள்ளார் ஒரு ஜப்பானியர். வெறும் 30 திராட்சை பழங்கள் மட்டுமே உள்ள அந்த திராட்சை கொத்தில் இருந்துள்ளது.
வாடிக்கையாளர்களை தங்கள் கடைகளில் ஈர்ப்பதற்கென்றே விற்பனையாளர்கள் இதுபோன்ற அரியவகை பழங்களை ஜப்பானில் சாதனை விலைக்கு வாங்கி வைப்பது வாடிக்கை.
ஜப்பான் நாட்டவர்களுக்கு பழங்கள் என்றால் கொள்ளை பிரியம். பழ வகைகளை விலைமதிப்பற்றவையாக கருதும் ஜப்பானியர்கள், தங்களது உற்றார் உறவினர்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் பரிசளிக்க வேண்டும் என்றால் பழங்களையே அளிக்கின்றனர்.
ரூபி ரோமன்ஸ் எனப்படும் அரியவகை திராட்சை ஜப்பானில் மட்டுமே காய்க்கின்றது. ping-pong பந்து அளவே இருக்கும் இதன் பழங்கள் சுவைகளின் உச்சம் என கூறப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு வரை இந்த தீஞ்சுவை பழத்திற்கு குறிப்பிட்ட பெயர் எதுவும் இல்லையாம். அதன் பின்னரே பொதுமக்கள் தெரிவு செய்த பல வகையான பெயரில் இருந்து ரூபி ரோமன்ஸ் என்ற பெயரை தெரிவு செய்துள்ளனர்.
ஜப்பானின் இஷிக்காவா பகுதியில் மட்டுமே ரூபி ரோமன்ஸ் காய்க்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.